வாக்குறுதியை மறந்த குமரன்


குமரன் தன் அறையில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தான்.  அம்மாவுக்கு அவசரமாகக் கடைக்குப் போக வேண்டி இருந்தது.  அதைக் கூறிவிட்டுப் போவதற்காகக் குமரனின் அறைக்கு வந்தார்.  வந்தவர் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார்.  ஏனென்றால் குமரனின் அறை மிகவும் குப்பையாக இருந்தது.  புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள், உடைகள் எல்லாம் தரைமீதும் கட்டில் மீதும் இறைந்து கிடந்தன.  அம்மாவுக்கு கால் வைக்கக் கூட இடம் இருக்கவில்லை.  குமரன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருந்தான்.

”குமரன் கவனமாக இருந்துகொள்.  நான் அவசரமாகக் கடைக்குச் சென்று வருகின்றேன்.” என அம்மா கூறினார்.

”நல்லது அம்மா, நான் தனியாக இருக்கிறேன்.  கடையில் எனக்கு உண்பதற்கு ஐஸ் வாங்கி வர முடியுமா?” எனக் குமரன் கேட்டான்.

“நான் ஐஸ் வாங்கி வருவேன்.  ஆனால் அதற்கிடையில் நீ உன் அறையைச் சுத்தம் செய்திருக்க வேண்டும்.  அதன் பின்புதான் நான் உனக்கு ஐஸ் சாப்பிடத்தருவேன்,” என அம்மா கூறினார்.

” சம்மதம் அம்மா, நீங்கள் திரும்பி வருவதற்கிடையில் நான் என் அறை முழுவதையும் சுத்தம் பண்ணிவிடுவேன்,”  குமரன் உற்ச்சாகமாகக் கூறினான்.

அம்மா கடைக்குப் போனதன் பின்பு குமரனுக்கு அறை சுத்தம் செய்யப் பிடிக்கவில்லை.  தொடர்ந்து விளையாடவே விருப்பமாகவே இருந்தது.  எனவே அவன் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்.  அம்மா திரும்பி வருவதற்கிடையில் விளையாட்டை முடித்து விட்டு பின்பு அறையையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணினான்.  ஆனால் விளையாட்டு மும்மரத்தில் அவனுக்கு நேரம் போனது தெரியவில்லை.

அம்மா கடையில் இருந்து திரும்பி வந்து விட்டார்.  நேராக குமரனின் அறைக்கு வந்தார்.  குமரனின் அறை சுத்தமாக்காமல் இருப்பதைக் கண்டு கோபம் அடந்தார்.

”குமரன் நீ ஏன் இன்னும் அறையைச் சுத்தம் செய்யவில்லை,” என்று கோபமாகக் கத்தினார்.

குமரன் அம்மாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை.
“அம்மா, எனக்கு ஐஸ் வாங்கி வந்தீர்களா,” என்று ஆவலாகக் கேட்டான்.

அம்மாவிற்கு இன்னும் கோபம் வந்தது.

”நான் கொடுத்த வாக்குப் படி உனக்கு ஐஸ் வாங்கி வந்தேன்.  ஆனால் நீயோ உன் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.  உன் அறையைச் சுத்தம் செய்யவில்லை.  அதனால் நான் இப்போ உனக்கு ஐஸ் தரமாட்டேன்.  அறையைச் சுத்தம் செய்த பின்புதான் தருவேன்,” என்று கண்டிப்புடன் கூறினார்.  ஐஸ்ஸை குமரனின் பார்வைக்குத் தெரியும் இடத்தில் ஆனால் கைக்கு எட்டாத இடத்தில் வைத்தார்.

குமரனுக்கு சலிப்பாக இருந்தாலும் ஐஸ் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் விரைவாக அறையைச் சுத்தம் செய்தான்.  அவன் விரைவாக வேலை செய்தாலும் அறை மிகவும் குப்பையாக இருந்ததால் அவனுக்கு அதிக நேரம் தேவைப் பட்டது.

ஒரு வழியாகத் தன் வேலையை முடித்துவிட்டு ஐஸ் சாப்பிடப் போனான்.  ஆனால் அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.  ஐஸ் முழுவதும் உருகி சாப்பிட முடியாதவாறு இருந்தது.  குமரன் அழத் தொடங்கி விட்டான்.


“நீ செய்த தவறுக்கான தண்டனைதான் இது.  நீ வாக்குக் கொடுத்த படியே அறையை முன்னதாகவே சுத்தம் செய்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது,”  என்று அம்மா கூறினார்.

குமரனுக்கு அம்மா கூறியது புரிந்தது.  எனிமேல் வாக்குறுதிகளை சரியாகக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தான்.  ஆனாலும் அவனால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை.  அழுகையையும் அடக்க முடியவில்லை.

அம்மாவிற்கு குமரனைப் பார்க்கப் பாவமாக இருந்த்தது.  ரகசியமாகக் குளிர்ப்பெட்டியில் வைத்திருந்த மற்றொரு ஐஸ்ஸை எடுத்துக் குமரனிடம் கொடுத்தார்.  “நீ உன் தவற்றை உணர வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன்,” என அன்புடன் கூறினார்.

“ அம்மா, நான் எனிமேல் எப்போதும் என் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன்,” என்று குமரன் மகிழ்ச்சியுடன் கூறினான்.  அம்மாவைக் கட்டி முத்தமிட்டான்.  புதிய ஐஸ்ஸைச் சுவைத்துச் சாப்பிட்டான்.